இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
31
பஞ்சக சுத்தி பார்த்து முகூர்த்த நிர்ணயம் செய்வதில், நல்ல முகூர்த்த காலம் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. காலத்தின் கட்டாயத் தால் சில சுபகாரியங்களை காலந்தாழ்த்தாமல் செய்யவேண்டியுள்ளது. அதுபோன்ற நெருக் கடியான நிலையில் சுபகாரியங்களை "கோதுளி' வேளையிலும், "அபிஜித்' முகூர்த்ததிலும் செய்யலாம் என்பது ஆன்றோர் வாக்கு. கோதுளி வேளையும், அபிஜித் முகூர்த்தமும் எல்லாவித தோஷங்களையும் போக்கக்கூடியவை. பசு மாடுகள் காலை நேரத்தில் மேய்ச் சலுக்குச் செல்லும் நேரமும், மாலை நேரத்தில் மேய்ச்சலை முடித்துக் கொண்டு தங்கள் கொட்டிலுக்குத் திரும்பும் நேரமுமே கோதுளி வேளையாகக் கணக்கிடப்படு கிறது. நண்பகல் (உச்சிக்காலம்) பொழுதே அபிஜித் முகூர்த்த மாகும். இதுபோன்ற விசேஷ முகூர்த்தங்களிலும், பிரும்ம முகூர்த்தம், ஜீவ- அம்ருத முகூர்த் தங்களிலும் செய்யவேண்டிய சுபகாரி யங்களை "கந்தர்வ நாடி'யின் முகூர்த்த நிர்ணய காண்டம் விரிவாக விளக்கு கிறது.
""ஒப்பிலா மணியே! ஞான வேள்வி யில் (கல்வி) அறிவினைப் பெறவேண்டி மாணாக்கர்கள் பெற்றோ ரைப் பிரிந்துசென்று குருகுலத்தில் கல்வி பயில்வதால் அடையும் சிறப்பினையும், குருபக்தியால் அடையும் உயர்வினையும் தாங்கள் விளக்க வேண்டுகிறேன்'' என அன்னை மங்கள நாயகி, விஜய மங்கை திருத்தலத்தில் அருள் பாலிக்கும் விஜயநாதரைப் பணிந்துகேட்டாள்.
அதற்கு விஜயநாதேஸ்வரர் உரைத்தது- ""தாய் மரத்தின் நிழலில் வளரும் மரக்கன்றுகள் நல்ல வளர்ச்சியை அடைவ தில்லை. தேரில் பயணிப்பவன் தேரோட்டியை நம்பித் தன்னுயிரை ஒப்படைப்பதுபோல, சீடன் தன் வாழ்க்கையை குருவிடமே சமர்ப்பிக்கிறான். இறையருள் வேண்டுபவன் முதலில் பக்தி செய்து பின்னர் சரணாகதி நிலையை அடைகிறான்.
ஆனால் சீடனோ முதலில் குருவிடம் சரணாகதி அடைவதால் குருபக்தியைப் பெறு கிறான். அறியாமை எனும் இருளை விலக்கி அறிவை விளக்குவ தால் குருவே வாழ்வின் விளக்காகிறார். குருபக்தி இருந் தால் மட்டுமே பெற்ற அறிவு பெருமை தரும்.''
""சித்தரும் பக்தரும் பித்தரும் கொண்டாடும் இமயத்தின் கொடுமுடியே! "ஆஷிப்தரேசிதம்' எனும் தாண்டவத்தின் லயமா கிய மிருகசிரீட நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், புனர்பூசம் இரண்டாம் பாதத் தில் சுக்கிரனும், புனர்பூசம் நான்காம் பாதத்தில் சூரியனும், ஆயில்யம் இரண்டாம் பாதத் தில் புதனும், ஹஸ்தம் மூன்றாம்
பாதத்தில் சனியும், சித்திரை நான்காம் பாதத்தில் குருவும், அவிட்டம் மூன்றாம் பாதத்தில் சந்திரனும், ரோகிணி இரண்டாம் பாதத்தில் செவ்வாயும் அமையப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் தயைக் கூர்ந்து விளக்கவேண்டும்'' என்று திருப்பனந்தாள் திருத்தலத் தில் அருள்புரியும் செஞ்சடை யப்பரிடம் அன்னை பெரிய நாயகி வினவினாள்.
ஜடாதரர் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முன்ஜென்மத்தில் பிரக்யோதிஸ்புரா எனும் நகரில் பிறந்தான். கல்வியில் சிறப்புற்று, ஒரு தர்மசாலையின் அதிகாரியானான். தன்னலமும் தீய எண்ணமும் கொண்டு தர்மசாலையின் செல்வத்தைக் கொள்ளையடித்தான். அழியும் செல்வத்தை தவறான வழியில் தேடி, குணமழிந்து பாவப்படு குழியில் வீழ்ந் தான். ஒருநாள் தர்மசாலையில் உண்டான தீ விபத்தில் உடல் கருகி உயிர் நீத்தான். தீயில் மாண்டதால் பிரேத ஜென்மமெடுத்து, கடும் பாலைவனத்தில் எமகிங் கரர்களால் வதைக்கப்பட்டு, "கிரௌஞ்சம்' எனும் நகரத்தின் வழியே நரகத்தையடைந்தான். சிலகாலம் கழித்து உதயகிரி எனும் ஊரில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து நோயுடன் வளர்ந்தான். கடலில் பயணிப் பவன் குடிநீரின்றித் தவிப்பதுபோல, அவன் பெற்ற செல்வத்தை அனுபவிக்க முடியாமல் அல்லலுறுகிறான்.
முற்பிறவியில் அமைதியைவிட்டு தகாத செல்வத்தைத் தேடினான். அந்த பாவத்தினால் இந்தப் பிறவியில் செல்வத்தை மறந்து அமைதியைத் தேடுகிறான். இதற்குப் பரிகாரமாக தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை ஏழைகளுக்கு தானம் செய்து, ஏகாதசி நாட்களில் விரதமிருந்துவர, நோய் தீர்ந்து சுகம் உண்டாகும்.''
(வளரும்)
செல்: 63819 58636